‘’ தம்பி என்கிட்ட ஒன்னுமில்ல தம்பி பீரோவை உடைக்காதே ‘’ - திருடனுக்கு லெட்டர் எழுதிய வழக்கறிஞர்
சென்னை தாம்பரத்தில் வழக்கறிஞர் ஒருவர் திருடனுக்கு கடிதம் எழுதி பீரோவில் ஒட்டிவைத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது .
சென்னை கிழக்கு தாம்பரத்தின் கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காட்வின். வழக்கறிஞரான இவர் போலீசார் மீதிருந்த அதிருப்தியால் நேரடியாக திருடனிடமே ஒரு விஷயத்தை டீல் செய்துள்ளார்.
வெளியூருக்கு குடும்பத்துடன் சென்ற அந்த வழக்கறிஞர் தன் வீட்டு பீரோவில் கடிதம் ஒன்றை எழுதி ஒட்டியுள்ளார். அதில்,'' தம்பி. பீரோவை உடைத்து விடாதே. உள்ளே துணிகளை தவிர வேறு எதுவும் இல்லை. எப்படியும் காவல் துறை உன்னை பிடிக்க மாட்டார்கள். சேதாரம் செய்துவிடாதே. நன்றி'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள வழக்கறிஞர், '' என்னுடைய வீட்டில் இரண்டு கொள்ளை சம்பவங்கள் நடந்தது. கைரேகை, சிசிடிவி இருந்தும் திருடனை போலீசார் இதுவரை பிடிக்கவில்லை. கடந்த ஆண்டு வெளியூர் சென்றபோது சேலையூர் போலீசாரிடம் பாதுகாப்புக்கு கடிதம் கொடுத்தேன்.
வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் இல்லை என எழுதிக் கொடுக்குமாறு அவர்கள் கேட்டனர். அதனால் இந்த வருடம் அதே கடிதத்தை திருடனுக்கே எழுதிவிட்டேன் என்றார்.
நேரடியாக திருடனுக்கே வழக்கறிஞர் ஒருவர் கடிதம் எழுதிய சம்பவம் தாம்பரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.