சென்னை மேம்பாலத்தில் பற்றி எரிந்த கார் - உடல் கருகி ஒருவர் பலி!
சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி மளமளவென எரிந்ததில் உடல் கருகி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை வேலப்பன்சாவடியை சேர்ந்த அர்ஜுனன் கார்பெண்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் திருவேற்காட்டில் இருந்து சூளைமேடு செல்வதற்காக கார் ஒன்றை புக் செய்துள்ளார்.
இந்த காரை சுனில் குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்த கார் கோயம்பேடு மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிந்துள்ளது.
இதனை கண்ட பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். காரை ஓட்டி வந்த ஓட்டுநர் தீப்பற்றியவுடன் எப்படியோ அங்கிருந்து தப்பிவிட்டார்.
ஆனால் காரில் பயணம் செய்த அர்ஜுனன் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கி கொண்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், மள மளவென பற்றி எரிந்த தீயை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.
இதில் காரில் பயணம் செய்த அர்ஜுனன் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், காரை ஓட்டி வந்த சுனில் குமார் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார். அர்ஜூனனின் எலும்பு கூடை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.