கனமழையால் குடிசை மாற்று வாரிய பகுதி மக்கள் அவதி - விரைந்து உதவிய எஸ்.டி.பி.ஐ. கட்சியினர்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஆங்காங்கே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றன.
அந்த வகையில் சென்னை கே.கே.நகரின் ராணி அண்ணாநகர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. இந்த மழைநீர் வடியவோ, செல்லவோ இடம் ஏதும் இல்லாத இச்சமயத்தில் அப்பகுதி மக்கள் முழுவதும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் அப்பகுதிகளுக்குள் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் தங்க இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இதில், குறிப்பாக அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில், இன்னும் 1 வாரத்தில் நடைபெறவுள்ள மகளின் திருமணத்திற்காக எடுத்து வைத்திருந்த 10க்கும் மேற்பட்ட பட்டுப்புடவைகள், கல்யாண பொருட்கள் என அனைத்தும் வெள்ள நீரில் எடுத்து செல்லப்பட்டுள்ளதால் அந்த குடும்பமே வேதனையில் வாடியுள்ளனர்.
இது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததாகவும் வேதனை தெரிவித்தனர்.
இந்த நிலையில் இவர்களின் கண்ணீரை கண்டு தாமாக முன்வந்த எஸ்.டி.பி.ஐ. கட்சி அமைப்பினர் அவர்களது சொந்த செலவில் அவர்களை பாதுகாப்பாக தங்க வைத்தும், கடந்த 2 நாட்களாக உணவு வழங்கியும் கவனித்து வருகின்றனர்.
இதனால் நெகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் எஸ்.டி.பி.ஐ கட்சி அமைப்பினருக்கு அவர்களது நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.