ஆவடியில் முககவசம் அணியாமல் வந்தவர்களிடம் ரூ.200 அபராதம் விதிப்பு
சென்னை ஆவடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முககவசம் அணியாமல் நடந்து வந்தவர்களுக்கும், வாகனங்களில் வந்தவர்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர். தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் 2ம் அலை தீவிரமடைந்து வருகிறது. சென்னையில் நாளொன்றுக்கு 1,500க்கும் மேற்பட்டோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மேலும், திருவள்ளூரிலும் தினமும் 200 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு தற்போது விதித்திருக்கிறது.
இந்நிலையில் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய்த்தடுப்பு பணிகள் மற்றும் மருத்துவ முகாம்களை திருவள்ளூர் மாவட்ட வருவாய் அதிகாரி முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளிடமும், பொது மக்களிடமும் 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.
மேலும் ஆவடி பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் முக கவசம் அணிய வேண்டும், கடைக்கு வெளியே சானிடைசர் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வழங்க வேண்டும். முக கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருள்கள் வழங்கக் கூடாது என கூறி அறிவுரை வழங்கினர்