குழந்தைகளுடன் சிறையிலுள்ள 7 பெண் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...

Tn government Chennai highcourt Woman prisoners
By Petchi Avudaiappan May 27, 2021 02:48 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

குழந்தைகளுடன் தமிழக சிறைகளிலுள்ள 7 பெண் கைதிகளை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் சிறைக் கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்வது, பரோல் வழங்குவது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் வைகை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில் சிறைகளில் ஆறு வயதுக்கு கீழான குழந்தைகளுடன் பெண் கைதிகளின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும் சிறைகளில் காலியாக உள்ள மருத்துவர், தூய்மைப் பணியாளர்கள் காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளும், இரு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களும் அறிக்கை தாக்கல் செய்தன.

தமிழகத்தின் அறிக்கையில், ஏற்கனவே சிலர் விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும், குழந்தைகளுடன் உள்ள 4 தண்டனை கைதிகள் உள்ளிட்ட 7 பெண் கைதிகள் தற்போது சிறையில் உள்ளதாகவும், அவர்களை விடுவிக்க அரசு மடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. புதுச்சேரி அறிக்கையில் அங்குள்ள மத்திய சிறையில் 156 கைதிகளில் 77 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் சிறைக்கு வந்துவிட்டதாகவும், 31 பேருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குழந்தைகளுடன் சிறையிலுள்ள 7 பெண் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு... | Chennai Highcourt Ordered Released Woman Prisoners

நீதிமன்றத்திற்கு உதவும் நபராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் ஆர்.வைகை ஆஜராகி, கைதிகள் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுபடி அமைக்ககப்பட்டுள்ள உயர் மட்ட குழு முடிவுகளை இணையரளத்தில் வெளியிட வேண்டுமெனவும், புழல் சிறையில் அமைக்கப்பட்டது போல அனைத்து சிறைகளிலும் கோவிட் கேர் சென்டர்களை அமைக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

இதனையடுத்து தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவில், தமிழக சிறைகளில் உள்ளப்7 பெண் கைதிகளை விடுவிக்க விரைந்து முடிவு எடுக்க உத்தரவிட்டனர். மேலும், சிறைக்கைதிகள் விடுதலை குறித்து உயர் மட்ட குழு எடுக்கும் முடிவுகளை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஜூன் 7 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.