பேனர்களை தடுப்பது குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

chennai high court blockingbanner
By Irumporai Oct 05, 2021 06:29 AM GMT
Report

விழுப்புரத்தில் முன்னாள் எம்எல்ஏ இல்ல திருமணத்திற்கு வந்த அமைச்சர் பொன்முடியை வரவேற்று பேனர் வைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 12 வயது சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி பலியானார்.

இந்த சம்பவத்தை குறிப்பிட்டு விழுப்புரத்தில் சட்டவிரோதமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கினை தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொடிக்கம்பங்கள் பேனர்கள் வைக்க கூடாது என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி இந்த கொடிக்கம்பங்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், இது தொடர்பான ஒரு வழக்கில் திமுக தரப்பில் பேனர்கள் வைக்கப்பட மாட்டாது என்று உத்தரவாதம் அளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார். இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், "பேனர்கள் வைப்பதற்கு ஒப்பந்தம் பெற்றிருந்த காண்ட்ராக்டர் தான் 12 வயது சிறுவனை பணியில் அமர்த்தி இருக்கிறார்.

இந்தச் சம்பவத்துப்பின் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் முதன்மை நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உள்ளது. மேலும் பலியான சிறுவனின் குடும்பத்தினருக்கு தற்காலிகமாக ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டே முதல்வர் முக.ஸ்டாலின் பேனர்கள் வைக்கக்கூடிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டேன் எனக் கூறியுள்ளார்” என்றார். இதையடுத்து அனுமதியின்றி பேனர்கள் வைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி மாவட்டங்களுக்கும், தாலுகா நீதிமன்றங்களுக்கும் தான் சென்ற போது ஏராளமான பேனர்களை பார்த்ததாகவும் தெரிவித்தார்.

பின்னர் பேனர்கள் வைப்பது முழுமையாக தடை செய்யும் வகையில் உரிய விதிகளை வகுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசும், திமுகவும் ஆறு வாரங்களில் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.