'த்ரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்' - மன்சூர் அலிகானுக்கு நீதிபதி சரமாரி கேள்வி!
பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்துங்கள் என மன்சூர் அலிகான் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கூறியுள்ளார்.
மன்சூர் அலிகான்
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடிக்க, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து மன்சூர் அலிகான் மீது பெண்களை இழிவுபடுத்தி பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகை த்ரிஷாவிடம், மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரினார்.
த்ரிஷாவும் அவரை மன்னித்து விட்டதா தெரிவித்தார். இந்த விவகாரம் சற்று ஓய்ந்திருந்த நிலையில் த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவிக்கு எதிராக மான நஷ்ட ஈடு கோரி மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதி உத்தரவு
மேலும், மூன்று பேரும் தலா ரூ.1 கோடி வீதம் மொத்தம் ரூ.3 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மன்சூர் அலிகான் அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் வந்தபோது, இந்த விவகாரத்தில் த்ரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என்றார் நீதிபதி .
எங்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்க வேண்டாம். நடிகராக இருக்கும் ஒரு நபரை பல இளைஞர்கள் ரோல் மாடலாக பின்பற்றும் நிலையில், பொதுவெளியில் அநாகரிகமாக நடந்து கொள்ளலாமா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், மன்சூர் அலிகானுக்கு பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துங்கள் என மன்சூர் அலிகான் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கூறினார்.
இதனைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் மனுவிற்கு பதிலளிக்கும் படி நடிகைகள் த்ரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை டிசம்பர் 22ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்..