சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்.. எதற்காக?
கடந்த பிப்ரவரி மாதம் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான சசிகலா தமிழகம் வந்தடைந்தார். நிச்சயம் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என அறிவித்திருந்த சசிகலா மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. சசிகலா அடுத்த கட்ட அரசியல் நகர்வு தான் தமிழக அரசியலின் பேசு பொருளாக இருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக சசிகலா அறிவித்துவிட்டு விலகினார்.
இந்த அறிவிப்பால் டிடிவி தினகரன் உள்ளிட்ட பலருமே அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்க ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது என சசிகலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இது தொடர்பாக சசிகலா பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுக தலைமை தொடர்பான சிவில் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் சசிகலா தரப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சசிகலாவின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சசிகலா பல முக்கிய நகர்வுகளை மேற்கொள்வார் எனச் சொல்லப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.