ஜெயிலர் படத்திற்கு தடை? கைதியின் காதை துண்டிக்கிறார் ரஜினி - சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

Rajinikanth Tamil Cinema Jailer Madras High Court
By Jiyath Aug 19, 2023 06:47 AM GMT
Report

ஜெயிலர் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜெயிலர்

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது. இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராப், தமன்னா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

ஜெயிலர் படத்திற்கு தடை? கைதியின் காதை துண்டிக்கிறார் ரஜினி - சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு! | Chennai High Court Seeking Ban Of Jailer Movie

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வக்கீல் எம்எல் ரவி என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

பொதுநல வழக்கு

மனுவில் கூறப்பட்டுள்ளதாவது 'திரைப்படத்தை பார்த்தேன். மிக மோசமாக, படு பயங்கரமான வன்முறை காட்சிகள் பல இடங்களில் உள்ளன. திரைப்படத்துக்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கி உள்ளது. இதனால் இளைஞர்கள், குழந்தைகள் இந்த திரைப்படத்தை பார்க்கலாம்.

ஜெயிலர் படத்திற்கு தடை? கைதியின் காதை துண்டிக்கிறார் ரஜினி - சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு! | Chennai High Court Seeking Ban Of Jailer Movie

ஆனால், படுபயங்கரமான வன்முறை காட்சிகள் உள்ளன. பெரிய சுத்தியலை கொண்டு ஒருவரின் தலையை அடித்து சிதைப்பது, பெரிய வாளை வைத்து ஒருவரது தலையை துண்டிப்பது போன்ற வன்முறை காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே தமிழ்நாட்டில் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களின் பற்களை அகற்றிய குற்றச்சாட்டில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் சிக்கினார்.

அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அப்படியான சூழலில் படத்தில் திகார் சிறையில் ரஜினிகாந்த் ஜெயிலராக இருக்கும்போது தண்டனை கைதியின் காதை துண்டிப்பது போன்ற காட்சி உள்ளது. சினிமா என்பது மக்களை மிக எளிதில் கவர்ந்து விடும். அப்படி இருக்கும்போது, இந்த படத்தை பார்க்கும் இளைஞர்கள், குழந்தைகளின் மனதில் வன்முறை எண்ணம் தான் உண்டாகும்.

எனவே, ஜெயிலர் படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும். இந்த படத்துக்கு வழங்கப்பட்ட யுஏ தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.