சட்டமன்ற தேர்தல் தினத்தில் போக்குவரத்து பிரச்சினை - தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் நோட்டீஸ்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது வாக்காளர்கள் வாக்களிக்கப் போதிய போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தாதது மற்றும் பேருந்து நிலையங்களில் வாக்காளர்கள் தவித்தது தொடர்பான புகார் மனுவுக்கு, இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில், வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்ற வாக்காளர்கள் பலர், போதுமான பேருந்து வசதிகள் இல்லாத காரணத்ததால், வாக்களிக்க முடியாமல் போனது. இது குறித்து ஆணையம் அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவில் தேர்தல் நாளில் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்கத் திட்டமிட்ட வாக்காளர்களுக்குப் போதிய பேருந்து வசதிகள் செய்யப்படவில்லை என்றும், இதனால் சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் வாக்காளர்கள் பேருந்து நிலையங்களில் தவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போல வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு செல்ல, வாக்காளர்களுக்கு போதுமான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தாததால் நூறு சதவீத வாக்குப்பதிவை எட்ட முடியவில்லை என்றும் மாநில போக்குவரத்து துறையும், தெற்கு ரயில்வே நிர்வாகம் அதற்கு ஏற்பாடு செய்யவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குறைபாடுகள் தொடர்பாக ஆணையம் அமைத்து விசாரணை நடத்தும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ் சௌந்தர் மற்றும் பி பி பாலாஜி அடங்கிய அமர்வு, தேர்தல் ஆணையம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.