பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம்: அமைச்சர்
நாளை வரை பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை உள்பட தமிழ்நாட்டின் அநேக இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்றும் நாளையும் அதி கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாமல்லபுரம் - ஸ்ரீஹரிகோட்டா இடையில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம், தேவையான முன்னேற்ற நடவடிக்கையை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
தேசிய பேரிடர் மீட்பு படையின் 3 குழுக்கள் சென்னையில் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்த அமைச்சர், இன்று இரவிலிருந்து நாளை வரை பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம்.
ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
நீர்நிலைகள், முழுவதுமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது எனவும், இரவு நேரங்களில் தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்று உத்தரவிட்டு இருப்பதாகவும், நெற்பயிர்கள் சேதம் குறித்து கணக்கீடு வந்திருக்கிறது,
மழை முடிந்த பிறகு முழுவதுமாக கணக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார். நீர்நிலைகளில் செல்பி எடுக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.