மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களைக் காப்பாற்றுங்கள் - ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். அதிரடி அறிக்கை
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ததால் சாலைகள், தெருக்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவ மழையின் தொடக்க நிலையிலேயே சென்னை மாநகர வீதிகளில் ஆறுபோல் தண்ணீர் ஓடுவதையும், சென்னை நகரே குளம்போல் தண்ணீர் சூழ்ந்து காணப்படுவதையும், இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் இருப்பிடங்களுக்குள் தண்ணீர் புகுந்து அவர்கள் அல்லல்படுவதை பார்க்கும்போதும் மிகுந்த மனவேதனையும், துயரமும் ஏற்படுகின்றன.
அண்மைக் காலத்தில் நமது அண்டை மாநிலங்களில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை பார்த்த பிறகேனும் உரிய முன்னேற்பாடுகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டிருக்க வேண்டும். வருமுன் காக்கும் வழிகளில் கவனம் செலுத்தியிருந்தால் தலைநகராம் சென்னையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் இவ்வளவு விரைவில் இத்தகைய பெரிய பாதிப்பை சந்தித்திருக்கமாட்டாது.
சென்னையின் பெரும்பாலான சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நின்று போயிருக்கிறது. கழக ஆட்சியின்போது சுரங்கப்பாதை தண்ணீரை வெளியேற்ற ராட்சச மோட்டார் பம்ப்களை பயன்படுத்தி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் நீர்வெளியேற்றம் நடைபெற்றதை நினைவூட்டுகிறோம்.
மழைக் காலத்தில் சாலையோர மரங்கள் கண்காணிக்கப்பட்டு திடீரென மரங்கள் சாயாதவண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தலைமைச் செயலகத்திலேயே மரம் முறிந்து விழுந்து பெண் காவலர் உயிரிழந்த பரிதாபம் ஏற்பட்டது போல இன்னுமொரு துயரம் எங்கும் நடைபெற்றுவிடக் கூடாது.
மழைக் காலங்களில் மின்கசிவு ஏற்பட்டுவிடாதபடி மக்களை பாதுகாக்க மின்சாரத் துறை அதிகாரிகள் உடனடியாக முன்னேற்பாடுகளைச் செய்திட வேண்டும். மின் கம்பிகள் அறுந்து விழாத வகையிலும், மின் கம்பங்கள் சாய்ந்துவிடாதபடியும் தற்காப்பு நடவடிக்கைகளை மின் வாரியம் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
ஓரிரு நாள் மழைக்கே இப்படி என்றால், இனி வரும் நாட்கள் எப்படி இருக்குமோ? என்ற கவலை அனைவர் நெஞ்சிலும் ஏற்பட்டுள்ளது. நிலைமையின் தீவிரம் உணர்ந்து அரசு இயந்திரம் முழுமையாக செயல்பட வேண்டும்.
பருவநிலை மாற்றம் காரணமாக பெருமழை, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்ட நிலையில் வருமுன் காப்பதே மக்களை காக்க நமக்கிருக்கும் ஒரே வழி. இதனை உணர்ந்து தமிழ் நாடு அரசு விவேகத்துடனும், விரைந்தும் செயல்பட வேண்டும்; மக்களின் உயிரும், உடமையும், வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் வலியுறுத்தலாகும் என்று குறிப்பிட்டுள்ளனர்.