மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் பாஜக தீவிரமாக செயல்பட வேண்டும் - அண்ணாமலை
தொடர் கனமழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில் மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் நமது கட்சியினர் முனைப்போடு ஈடுபட வேண்டும் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகமெங்கும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் மழையால் வெள்ளம் ஏற்பட்டு வருகிறது.
சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்துள்ளன.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த 6 ஆண்டுகளாக இல்லாத அளவில் மழை பெய்துள்ளது.
எனவே கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் மக்கள் துயர் துடைக்கும் வகையிலே, நிவாரணப் பணிகளில் உடனடியாக ஈடுபட வேண்டுகிறேன் என்றும்,
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குதல், மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லுதல், உதவிப் பொருட்கள் வழங்குதல் போன்ற பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டுகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.