சென்னையில் 6 சுரங்கப்பாதைகள் மூடல்: போக்குவரத்து மாற்றம்
சென்னையில் நள்ளிரவு முதலே பலத்த மழை பெய்து வருவதன் எதிரொலியாக நகரின் முக்கியப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் மழை நீர் பெருக்கு காரணமாக ஆறு சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
அதன்படி ஈ.வி.ஆர் சாலை கங்குரெட்டி சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை, கணேஷபுரம் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை (இலகு ரக மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது).
மழைநீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்த விவரங்களையும் பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
ஈ.வி.ஆர் சாலையில் சென்ட்ரல் ரயில்வே சந்திப்பிலிருந்து நாயர் சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் ஈ.வி.ஆர் சாலை, காந்தி இர்வீன் சந்திப்பு (சி.எம்.டி.ஏ) வழியாக எழும்பூர் நோக்கி திருப்பி விடப்படும்.
பேந்தியன் ரவுண்டானாவில் இருந்து ராஜரத்தினம் மைதானம் (மார்ஷல் ரோடு) நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அவ்வாகனங்கள் பேந்தியன் சாலை வழியாக செல்லலாம். மார்ஷல் ரோடிலிருந்து பேந்தியன் ரவுண்டானாவை நோக்கி வாகனங்கள் வர அனுமதி உண்டு.
ஆற்காடு சாலை 80 அடி ரோடில் இருந்து ராஜ மன்னார் செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரின் சில சாலைகளில் மழைநீர் பெருக்கு காரணமாக வாகனங்கள் மெதுவாக செல்கின்றன. அதற்கு ஏற்றவாறு பொதுமக்கள் தங்கள் பயணத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.