தாழ்வு மண்டலத்தின் மைய பகுதி சென்னையை தொட்டது - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “சென்னை கிழக்கு தென்கிழக்கு 450 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.
புதுச்சேரி கிழக்கே தென் கிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை கரையைக் கடக்கக்கூடும்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காரைக்கால் - ஸ்ரீஹரிகோட்டா இடையே புதுச்சேரிக்கு வடக்கே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 மாவட்டங்களில் ( சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு) ஒரு சில இடங்களில் கன மழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
கரையை கடக்கும் போது கடற்கரையோர பகுதிகளில் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றடிக்கும்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 40-50 கி.மீ இருக்கும். சில சமயத்தில் 60 கி.மீ வேகத்திலும் காற்று வீசும். பாதிப்பு மழையினால் இருக்கும், காற்றினால் இருக்காது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் இடத்தை துல்லியமாக முன்கூட்டியே கணிப்பது கடினம்” என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 7 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.