இரவில் இருந்து சென்னையில் மழை கொட்டி தீர்க்கும் - வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் சென்னையில் இன்று (நவ.10) இரவு முதல் காலை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
தெற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புவியரசன், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
4 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும், ஒருசில இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
புதுச்சேரி மற்றும் கடலூரில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு குறைந்திருக்கிறது. நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறும்.
தற்போதைய நிலவரப்படி புதுச்சேரிக்கு வடக்கே காரைக்காலுக்கும், ஸ்ரீஹரிஹோட்டாவுக்கும் இடையே காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் என்று கூறினார்.
தற்போது புதுச்சேரிக்கு 420 கிலோ மீட்டர் கிழக்கு, தென்கிழக்கு திசையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது.
சென்னையில் இருந்து 430 கிலோமீட்டர் கிழக்கு, தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கரையைக் கடக்கும்போது புயலாக மாற வாய்ப்பில்லை எனவும் கணிக்கப்பட்டுள்ளது.