சென்னையில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கன மழை
சென்னையில் கடந்த ஒரு வாரமாக, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்பொது சென்னையின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை எழும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம், கிண்டி, கோடம்பாக்கம், நந்தனம், ஈக்காட்டுத்தாங்கல்,
அண்ணாநகர், ஆலந்தூர், தேனாம்பேட்டை, நங்கநல்லூர், ராயப்பேட்டை, வடபழனி, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், கோட்டூர்புரம், அடையாறு, செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், வேளச்சேரி மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
மழையின் காரணமாக வேளச்சேரி, நுங்கம்பாக்கம், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனை உடனடியாக அப்புறப்படுத்தும் பணியில் மாணகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் நீலகிரி, சேலம், கோவை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.