காதலியை திட்டியதால் ஆத்திரம் - காதலி கண்முன்னே தாயை கொன்ற காதலன்
காதலியை திட்டியதால் காதலியின் தாயை அவரது காதலன் கொலை செய்துள்ளார்.
ஜூனியருடன் காதல்
சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த மைதிலி (61) கணவரை இழந்த நிலையில், தனது மகள் ரித்திகாவுடன் வசித்து வருகிறார். ரித்திகா(24) போரூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
ரித்திகா கடந்த 3 ஆண்டுகளாக தனது முகப்பேர் கோல்டன் ஜார்ஜ் நகர் பகுதியில் தங்கியிருக்கும், தன்னுடைய கல்லூரியில் படித்த ஜூனியர் மாணவரான ஷியாம் கண்ணன்(22) என்பவரை காதலித்து வந்துள்ளார்.
மகளை கண்டித்த தாய்
விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த ஷியாம் கண்ணன், தனியார் ஐஏஎஸ் அகாடமியில் போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகிறார். இருவரும் அடிக்கடி வெளியில் ஊர் சுற்றுவதையே வழக்கமாக வைத்திருந்துள்ளனர். இதன்காரணமாக, ரித்திகா அடிக்கடி இரவில் வீட்டுக்கு தாமதமாக வந்துள்ளார்.
இதனை அவரது தாய் மைதிலி கண்டித்துள்ள நிலையில் இருவருக்கிடமிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல், ரித்திகா இரவு வீட்டிற்கு தாமதாக வந்த போது, அவரது தாய் கடுமையாக திட்டியுள்ளார்.
இதனால் இருவருக்கிடமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே, ரித்திகா தனது காதலன் ஷியாம் கண்ணனை செல்போனில் அழைத்து தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த ஷியாம் கண்ணன் ரித்திகாவை எப்படி திட்டலாம் என மைதிலியிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
கொலை
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ஷியாம் கண்ணன், மைதிலியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து, சம்பவம் இடத்துக்கு வந்த ஜெ.ஜெ.நகர் காவல் துறையினர், மைதிலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், ஷியாம் கண்ணனையும் கைது செய்தனர். இது தொடர்பாக ரித்திகாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.