சென்னையில் நாளை அம்மா உணவகங்கள் செயல்படும்
சென்னையில் அம்மா உணவகங்கள் நாளை வழக்கம்போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால், தமிழகத்தில் ஏப்ரல் 25-ஆம் தேதி(நாளை) முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தளா்வற்ற முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. தளா்வற்ற பொது முடக்கத்தையொட்டி, தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவின்பேரில் செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி, மாநிலம் முழுவதும் மருந்து, பால், பத்திரிகை விற்பனைக் கடைகளைத் தவிா்த்து மீதியுள்ள அனைத்து கடைகளையும் மூடுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால் மளிகைக் கடைகள்,காய்கறி கடைகள்,ஹோட்டல்கள், சூப்பா் மாா்க்கெட்டுகள் உள்ளிட்ட கடைகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்படும்.
இந்த பொதுமுடக்கத்தை தீவிரமாக அமல்படுத்தும் வகையிலும், எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் மாநிலம் முழுவதும் சுமாா் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். இவா்கள் முக்கியமான சாலைகள், மாா்க்கெட்டுகள், அரசு அலுவலகங்கள்,மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறாா்கள்.
இதனால் சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் நாளை திறந்திருக்குமா என்கிற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்திருந்தது.
இந்த நிலையில் தான் சென்னையில் அம்மா உணவகங்கள் நாளை வழக்கம்போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.