இரும்பு ராடால் தாக்கிய இருவர் கைது: சிசிடிவி காட்சி வெளியீடு
சென்னை நுங்கம்பாக்கத்தில் முன்விரோதம் காரணமாக உணவக உரிமையாளரை இரும்பு ராடால் தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் சுலைமான் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக பிஸ்பி பிரியாணி என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார்.
அதே பகுதியில் அப்துல் ரஹீம் என்பவரும் ரஹ்மான் பிரியாணி என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார். அப்துல் ரஹீம் கடந்த மார்ச் மாதம் உணவகத்தை திறந்தபோது ஏற்கனவே இயங்கி வரும் பிஸ்மி என்ற பெயரில், உணவகத்தின் பெயரை வைத்ததாகவும், இதனால் சுலைமான் நீதிமன்றத்தை நாடியதில், அப்துல் ரஹீம் பிஸ்மி என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது என தடை வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக கடும் ஆத்திரத்திரத்தில் இருந்து வந்த அப்துல்ரஹீம், அடிக்கடி சுலைமானையும், அவரது கடை ஊழியர்களையும் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றிரவு சுமைமானின் கடைக்கு முன் வந்த அப்துல் ரஹீம் மற்றும் அவரது கூட்டாளிகள் சுலைமானையும், அவரது நண்பர்களையும் இரும்பு ராடால் சரமாரியாக தாக்கி விட்டும், அங்கிருந்த காரை அடித்து நொறுக்கிவிட்டும் தப்பிசென்றுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிசிடிவி ஆதாரங்களுடன் அப்துல் ரஹீம் மற்றும் அவரது நண்பரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.