ஹோட்டலில் 50% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி - மீறினால் உரிமம் ரத்து
உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மேல் உணவருந்த அனுமதித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் குறைந்த வந்த கொரோனா பாதிப்பு கடந்த மூன்று நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஊரடங்கைக் கூடுதல் தளர்வுகளின்றி வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே 50% அதிகமான நபர்களை அனுமதிக்கும் உணவகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனச் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,பொதுமக்கள் தங்களுடைய தேவைகளுக்காக வணிக வளாகங்கள், அங்காடிகள் உட்பட பல்வேறு பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், அவ்வப்பொழுது கைகளைச் சோப்பு கரைசல் மற்றும் சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்திக் கொள்ளுதல் போன்ற அரசின் பாதுகாப்பு வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசின் வழிகாட்டு நெறிமுறையைப் பின்பற்றாமல் 50 சதவீதத்திற்கும் மேல் உணவருந்த அனுமதிக்கும் ஓட்டல் மற்றும் உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவர்களுக்கான தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.