மின் விளக்குகளால் ஒளிரப்போகும் சென்னை - சூப்பர் பிளானை கையில் எடுத்த மாநகராட்சி
சென்னையில் 692 இடங்களில் மின் விளக்குகள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
மத்திய அரசின் நிர்பயா நிதியின் கீழ் பாதுகாப்பான நகரங்கள் திட்டத்தை செயல்படுத்த டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், அகமதாபாத், லக்னோ ஆகிய நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் சென்னையில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ரூ.425.06 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னையில் உள்ள பேருந்துகளில் சிசிடிவி கேமரா, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடங்களில் ஸ்மார்ட் கம்பங்கள், பெண்களுக்காக இ-கழிவறை, மொபைல் கழிவறைகள், இணையதளம் மூலம் கண்காணிக்கப்படும் தெரு விளக்குகள், அவசரகால தொலைபேசி மற்றும் மொபைல் ஆப் உள்ளிட்ட வசதிகளும் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் சென்னையில் 692 இடங்களில் மின் விளக்குகளை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி பகுதிகளில் இரவு நேரங்களில் வெளிச்சம் குறைவாக உள்ள பகுதிகள் என்று கண்டறியப்பட்ட இடங்களில் புதிய மின்கம்பங்கள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்விளக்குகளில் திருவெற்றியூர் மண்டலத்தில் 19, மணலி மண்டலத்தில் 39, தண்டையார் பேட்டையில் 109, ராயுபுரத்தில் 205, திரு.வி.நகரில் 66, அண்ணா நகரில் 129, கோடம்பாக்கத்தில் 110, அடையாறில் 7 என்று மொத்தம் 129 இடங்களில் அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.