சென்னையில் இன்று முதல் பார்க்கிங் கட்டணம் கிடையாது - மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னையில், மறு அறிவிப்பு வரும் வரை இன்று முதல் பார்க்கிங் கட்டணம் கிடையாது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை பார்க்கிங் கட்டணம்
சென்னையின் முக்கிய சாலைகள், கடற்கரையோ மற்றும் தெருக்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு, சென்னை மாநகராட்சி சார்பில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்த கட்டணங்களை வசூலிக்க டெக்ஸ்கோ நிறுவனத்துடன் சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் செய்திருந்தது. அந்த நிறுவனமே கட்டணம் வசூலித்து வந்தது.
இந்த நிறுவனம் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கிறது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் மாநகராட்சிக்கு வந்தது.
இந்த நிலையில், இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில், புகாரின் காரணமாக மாநகராட்சி ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை.
இதன் காரணமாக இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை, மாநகராட்சிக்கு சொந்தமான பகுதிகளில் பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதை மீறி யாராவது பார்க்கிங் கட்டணம் கேட்டால், 1913 என்கிற உதவி எண் அல்லது பெருநகர சென்னை மாநகராட்சி சமூக வலைத்தளப் பக்கத்தில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.