இரு கல்லுாரி மாணவர்கள் இடையே மோதல் - மின்சார ரயில் மீது கற்கள் வீசி தாக்குதல்..!
பெரம்பூர் ரயில் நிலையம் அருகே இரு கல்லுாரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மாணவர்கள் கற்களை வீசி தாக்கி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி சென்ற திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர்.
சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் சென்றுகொண்டிருந்த ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர்.
இரு ரயில்களும் ஒரே திசையில் சென்று கொண்டிருந்தன.பெரம்பூர் ரயில் நிலையம் தாண்டியதும் மாநில கல்லூரி மாணவர்கள் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனர்.
பொறுமையிழந்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர் .இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து கீழே இறங்கிய மாநில கல்லூரி மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சென்ற மின்சார ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து அரக்கோணம் சென்ற மின்சார ரயிலும் நிறுத்தப்பட்டது. மாநில கல்லூரி மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.
பதிலுக்கு பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் தாக்க முற்பட்டனர்.அப்போது அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த செம்பியம் போலீசார் ,மாநில கல்லூரி மாணவர்கள் 15 பேரை பிடித்து தற்போது காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்களுக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது்.