6 சவரன் தங்க சங்கிலியை ரூ.5000க்கு விற்ற அப்பாவி திருடன் - போண்டா கடைக்காரரால் சிக்கியது எப்படி?
மூதாட்டி ஒருவரிடம் தங்க சங்கிலியை பறித்த திருடனை, 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
செயின் பறிப்பு
சென்னை மேற்கு முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் ஷிபா என்ற மூதாட்டி. இவர் மளிகை கடைக்கு நடந்து சென்ற போது கொள்ளையன் ஒருவன், அவர் அணிந்திருந்த 6 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளான்.
இது குறித்து ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்தில் அந்த மூதாட்டி புகார் அளித்தார். இது தொடர்பாக அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், சென்னை முகப்பேரை சேர்ந்த பரமசிவன் என்பவர் தான் செயின் பறிப்பில் ஈடுபட்டார் என்பதை உறுதி செய்து அவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூதாட்டியிடம் பறித்த தங்கச் செயினை அப்பகுதியில் இருந்த ஒரு போண்டா கடையில் விற்றது தெரியவந்தது.
அப்பாவி திருடன்
அதும், தற்போதைய நிலையில் சுமார் ரூ.2.75 லட்சம் மதிப்புள்ள தாலிச் சங்கிலியை வெறும் 5,000 ரூபாய்க்கு, பரமசிவன் போண்டா கடைக்காரருக்கு விற்றுள்ளார். இதனையடுத்து, போண்டா கடைக்காரரிடம் இருந்து தங்க சங்கிலியை மீட்ட போலீசார், அதனை மூதாட்டியிடம் ஒப்படைத்தனர்.
அப்பாவி கொள்ளையன் பரமசிவன், திருடிய பொருளின் மதிப்பு தெரியாமல் அதனை கவரிங் செயின் என நினைத்து விற்றாரா? அல்லது கிடைத்த வரை லாபம் என்று போண்டா கடைக்காரர் வாங்கினாரா? என்பது ஒருபுறம் இருந்தாலும், திருடு போன 6 சவரன் தங்கச் சங்கிலியை 24 மணி நேரத்தில் போலீசார் மீட்டுக் கொடுத்ததால் அநத மூதாட்டி மகிழ்ச்சியடைந்துள்ளனர்.