சென்னையில் மாநகரப் பேருந்து திடீரென மாயமானதால் அதிர்ச்சி
சென்னையில் மாநகரப் பேருந்து ஒன்று திடீரென மாயமானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் மாநகரப் பேருந்துகள் கடந்த சில வாரங்களாக இயங்கி வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் மாநகரப் பேருந்து ஒன்றை மர்ம நபர் ஒருவர் திடீரென ஓட்டிச்சென்றுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அண்ணாநகர் பணிமனையில் இருந்த மாநகர பேருந்து ஒன்றை மர்மமான முறையில் மர்மநபர் ஒருவர் ஓட்டி சென்றுள்ளார்.
இதனால் பணிமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து ஜிபிஎஸ் மூலம் பாடி மேம்பாலம் அருகே மாயமான பேருந்து இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர் இதனையடுத்து உடனடியாக அந்த பகுதிக்கு சென்று பேருந்தை போலீசார் மீட்டனர்.
பேருந்தை அண்ணாநகர் பணிமனையிலிருந்து ஓட்டி வந்தவர் யார் என்பது குறித்து தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.