சோகத்தில் சி.எஸ்.கே : ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகினார் தீபக் சஹார்
சென்னை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் தீபக் சஹார் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விளகியுள்ளார். கடந்த ஐ.பி.எல். சீசனில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீபக் சஹாரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 கோடி ரூபாய் கொடுத்து மீண்டும் வாங்கியது.
இந்நிலையில் கடந்த மாதம் 20-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியின் போது தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு தசைநார் கிழிந்து இருப்பது தெரியவந்தது.
இதன் காரணமாக அவர் அடுத்ததாக நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் சேர்க்கப்படவில்லை. இதனையடுத்து தீபக் சஹார் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில், காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தீபக் சஹார் காயத்தில் இருந்து மீள மேலும் ஒரு மாதத்திற்கு மேல் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தீபக் சஹார் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆரம்பம் முதலே சொதப்பி வருகிறது சென்னை அணி. இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளிலுமே தோல்வியை கண்டுள்ளது.
ஒரு போட்டியில் பேட்டிங்கில் சொதப்பினால், மற்றொரு போட்டியில் பந்துவீச்சில் சொதப்பியது. இப்படி இருக்க தீபக் சஹார் அணிக்கு திரும்பினால் அணி பந்துவீச்சில் வழுவடையும் என சென்னை அணி நம்பியது.
இந்நிலையில், தீபக் சஹார் ஐபில் தொடரில் இருந்து விலகியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனிடையே இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூர் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது குறிப்பிடதக்கது.