விமான சாகச நிகழ்ச்சி; எதிர்பார்த்ததை விட மிக அதிக மக்கள்..முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!
விமான சாகச நிகழ்ச்சி குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
ஸ்டாலின் விளக்கம்
92-வது இந்திய வான்படை தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் வான்படையின் சாகச நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை காண ஏராளமான சென்னை வாசிகள் அலைப்போல் திரண்டு வந்தனர்.இந்த சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு, 8000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், வெயில், நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்தனர்,அதில் சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர். 11 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி 1 மணிக்கு முடிந்தது. அதன்பின், ஒரே நேரத்தில் பொதுமக்கள் கிளம்பியதால் மெரினா காமராஜர் சாலை, சாந்தோம், பட்டினப்பாக்கம், அடையார் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதிகளவில் வெயில் வாட்டியதால் குழந்தைகள், சிறுவர்கள், முதியோர் சோர்வடைந்தனர். பலர் மயங்கினர். மெரினாவில் இருந்த தற்காலிக முகாமில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 93 பேர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி, ஓமந்தூரார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். அதில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த நிலையில், விமான சாகச நிகழ்ச்சியை காண எதிர்பார்த்ததை விட மிக அதிகமானோர் வந்ததே நெரிசல் ஏற்பட காரணம் என்று முதல்வர் தெரிவித்தார்.
அதிக மக்கள்..
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "சென்னையில் இந்திய விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சி மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குத் தேவையான நிர்வாக ரீதியிலான ஒத்துழைப்பையும், வசதிகளையும் செய்துத்தர இந்திய விமானப்படை கோரிக்கை விடுத்து இருந்தது."
"விமான சாகச நிகழ்ச்சிக்காக இந்திய விமானப்படை கோரியிருந்ததற்கு மேலாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கென தமிழ்நாடு அரசின் காவல்துறை, தீயணைப்புத்துறை, சென்னை பெருநகர மாநகராட்சி,
மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய முக்கியத் துறைகள் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்திருந்தன. இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. இருப்பினும் எதிர்பார்த்த எண்ணிக்கையை விட மிகமிக அதிக அளவில் மக்கள் வந்திருந்ததால்,
நிகழ்ச்சி முடிந்த பின்னர் திரும்பச் செல்லும் போது மக்கள் தங்கள் வாகனங்களை அடைவதிலும், பொதுப் போக்குவரத்தைப் பெறுவதிலும் மிகுந்த சிரமம் அடைந்தனர் என்பதை அறிந்தேன். அடுத்தமுறை இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது இவற்றில் கூடுதல் கவனமும் ஏற்பாடுகளும் செய்யப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.