சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதிகரிக்கும் கொரோனா
2019 ஆம் ஆண்டு உலகையே ஆட்டிப்படைத்த கொரோனாவால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்ததோடு, பலரையும் பொருளாதார ரீதியில் முடக்கியது.
இதனையடுத்து, ஊரடங்கு, முகக்கவசம், தடுப்பூசி போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில வாரங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.
இதனையடுத்து, இந்தியாவிலும் பல்வேறு மாநிலகளில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. இந்தியாவில், கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
சென்னையில் ஒருவர் உயிரிழப்பு
இந்நிலையில், சென்னையில் கொரோனவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
சென்னை மறைமலை நகரை சேர்ந்த, 60 வயதான மோகன் என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்றிரவு மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இன்று காலை உயிரிழந்துள்ளார்.
தமிழ்நாட்டில், கடந்த ஒரு வாரத்தில் 60 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என அறிவுறுத்தியுள்ளது.