மச்சான் சான்ஸே இல்ல ...நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல... இன்றோடு சென்னையின் வயது 382!
நீ எந்த ஊரோட உயிரா இருந்தாலும்
உன்ன சொந்தம் ஆக்கும் டா
அதுதான் இந்த ஊருடா இந்த ஊருடா...
இது சாதாரண பாட்டு இல்லை பாஸ் உண்மையும் கூட நம்ம சென்னைக்கு இன்னையோட தனது 382 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறது
வரலாறு:
மதராசப்பட்டினம் கிராமத்தைக் கிழக்கிந்திய நிறுவனத்துக்கு விற்ற நினைவாக மெட்ராஸ் தினம் கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 22-ம் தேதி 1639 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது .
சென்னையை பொறுத்தவரை இந்தியாவின் நான்காவது பெரிய நகரம் இந்தியாவின் பிரதான கலாச்சார நகரங்களில் ஒன்று தென் இந்தியாவின் நுழைவாயில் என்ற சிறப்பை பெற்றது.
அது மட்டும் இல்லை பாஸ்.. சினிமா, அரசியல், தொழில், வணிகம், என பன்முகத்தின் திடமையமாக சென்னை திகழ்கிறது.. சென்னைக்கு என்று பிரத்யேகமான தொழில், அமைப்புகள் எதுவும் இல்லை.
பலவித மொழிகள், பலவித மாநில மக்கள், பலவித கலாச்சாரங்கள், பலவித தொழில்கள் சார்ந்த மண்ணாக சென்னை விளங்கி கொண்டிருக்கிறது இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.
சென்னை தினத்தை எப்படிக் கொண்டாடப்பட வேண்டும் என்ற யோசனையைச் சென்னை பத்திரிகையாளர் வின்சென்ட் டி சோசா வரலாற்று ஆசிரியர் முத்தையாவிடம் 2004-ல் பரிந்துரைத்து,சென்னை தினம் கொண்டாடப்படுகிறது
. தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நகர வளர்ச்சியின் காரணமாகச் சென்னையில் இன்று மறைந்த விஷயங்கள் பல உள்ளன. முன்பு மெட்ராஸிலிருந்த காலப்போக்கில் மறைந்துபோன சிலவற்றின் தொகுப்பை காணலாம் .
டிராம் வாகனம்:
டிராம் வாகனங்கள் 19ஆம் நூற்றாண்டு தொடங்கி 67 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருந்தன. முதல் மின்சார டிராம் 7 மே 1895 அன்று செயல்படத் தொடங்கியது. இது சரக்குகள் மற்றும் மக்களை ஏற்றிச் செல்வதால் அவசியமான ஒன்றாகக் கருதப்பட்டது.
இந்த வாகனம் மவுண்ட் ரோடு, பூந்தமல்லி சாலை, ரிப்பன் பில்டிங், பாரிஸ் கார்னர் ஆகியவற்றை உள்ளடக்கிய வழித்தடத்தில் பயணித்தது . நகர வளர்ச்சியின் காரணமாக டிராம்களின் இருப்பு முற்றிலும் மறைந்துவிட்டது.
குதிரை வண்டி:
பண்டைய காலங்களில் குதிரை போர் முதல் போக்குவரத்து வரை பயன்பட்டது. ஆங்கிலேயர்கள் ஆட்சியிலும், வாகனங்கள் வருவதற்கு முன்பு குதிரைதான் போக்குவரத்துக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
30 ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னையில் பெரும்பாலான இடங்களில் குதிரை வண்டிகள் அணிவகுத்து நிற்பதை நம்மால் பார்த்திருக்க முடியும். தற்போது எப்படி ஆட்டோ, டாக்சி, கார் என்று வாகனங்களை மக்கள் பயன்படுத்தி வந்தார்களோ, காலப்போக்கில் அந்த குதிரை வண்டிகள் எல்லாம் காணாமல் போனது. தற்போது சென்னை புறநகர் பகுதியில் , மெரினா கடற்கரையிலும் மட்டுமே அரிதாகக் குதிரைகளைக் காண முடிகிறது.
டபுள் டெக்கர் பேருந்து :
டபுள் டெக்கர் பேருந்து 80-களின் கனவுப் பேருந்து. பார்க்கவே பிரமாண்டமாய் இருக்கும். இது மக்கள் பலருக்கும் தினசரி போக்குவரத்தாக பயன்பாட்டில் இருந்தது.
இந்த பேருந்து நகரப் போக்குவரத்துக்குப் பொருத்தமற்றதாக இருந்தாலும், அதிக பராமரிப்பு தேவைப்பட்டதாலும் 1990-களிலேயே இதன் பயன்பாடு நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு இல்லாமை மற்றும் அதன் உயரம் அப்பேருந்து நிறுத்தப்பட்டதிற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது.
பக்கிங்ஹாம் கால்வாய்:
வணிகத்திற்குச் சென்னைக்குள் ஒரு நீர் வழிப்பாதை இருந்தால் சுலபமாகப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் என்று ஆங்கிலேயர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டது பக்கிங்ஹாம் கால்வாய்.
ஆந்திராவிலிருந்து தமிழகம் வரை கிட்டத்தட்ட 800 கி.மீட்டருக்கும் அதிகமான முக்கிய நீர் வழிப்பாதையாக இந்த கால்வாய் இருந்து வந்தது. நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான படகுகளில் மனிதர்கள், பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்த கால்வாயில் பயணம் செய்தனர்.
19-ம் நூற்றாண்டில் மிக முக்கிய நீர் வழிப்பாதையாக விளங்கியது இந்த பக்கிங்ஹாம் கால்வாய். காலப்போக்கில் இந்த கால்வாயின் அகலம் குறைந்து தற்போது வாய்க்கால் போன்று காட்சியளித்து வருகிறது.
சுனாமியின்போது சென்னையில் பெரும் அரணாக இருந்தது. இந்த கால்வாய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையை தென் சென்னை மற்றும் வட சென்னை எனப் பொதுவாகச் சொல்வதுண்டு. ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, கிண்டி, அடையார், குரோம்பேட்டை, மயிலாப்பூர் எனப் பல பகுதிகளை தென் சென்னை உள்ளடக்கியுள்ளது. அதேபோல் வியாசர்பாடி, புளியந்தோப்பு, ஓட்டேரி, மூலக்கடை, சௌகார்பேட்டை, ராயபுரம், பெரம்பூர் போன்ற முக்கிய இடங்களைக் வடசென்னை கொண்டுள்ளது.
சென்னை வட சென்னை:
வட சென்னை நகரத்தின் இதயத்துடிப்பு என்றும் கூறலாம். இந்தியாவிற்கு எவ்வாறு ஹாக்கி தேசிய விளையாட்டாக விளங்குகிறதோ, அதேபோல் வடசென்னையில் 'பாக்ஸிங்' மற்றும் 'கால்பந்து' முக்கிய விளையாட்டாகும்.
வட சென்னை லோகோ வேலைகள் (இரயில் சீர்செய்தல் மற்றும் தயார்ப் படுத்துதல்), மார்க்கெட், பர்மீஸ் உணவு வகைகள் முதலியவற்றுக்குப் புகழ்பெற்றது. தெர்மல் மின் நிலையம், பெட்ரோலிய நிறுவனம், ஆட்டோமொபைல்ஸ், ரப்பர் தொழிற்சாலை, காட்டன் டெக்ஸ்டைல்ஸ், இறைச்சி உற்பத்தி, போன்ற பலதுறைகளில் வட சென்னை தலைசிறந்து விளங்குகிறது. நிலக்கரி, தானியங்கள், பெட்ரோல் போன்ற பலபொருட்கள் வட சென்னை துறைமுகத்தின் மூலம்தான் சென்னைக்கு வந்திறங்குகிறது.
தென் சென்னை பெரும்பாலும் புகழ்பெற்ற கோவில் தென் சென்னையில் அமைந்துள்ளது. அருங்காட்சியகம், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும் தென் சென்னையில் உள்ளது. பல புராதன இடங்கள், வணிக வர்த்தக நிறுவனங்கள் இங்குதான் அதிகம் இருக்கிறது. புகழ்பெற்ற திரைத்துறை படப்பிடிப்பு நிறுவனங்களும் இங்கே அமைந்துள்ளது. அதோடு, வணிக வளாகங்கள், ஐ.டி நிறுவனங்கள் எனப் பல தொழில்நுட்ப பூங்கா தென் சென்னையின் புகழாகும்
சென்னை செந்தமிழ்:
மெட்ராஸ் டே கொண்டாடப்படும் இந்த நேரத்தில், "மெட்ராஸ் பாஷை" அல்லது "சென்னை பாஷை" சொல்லாடலை யாரும் எளிதாக கடந்து போய்விட முடியாது. இன்னா..ப்பா, குந்துப்பா.. நாஷ்டா துன்னியா.. ரொம்ப பேஜாரா கீதுப்பா.. இந்த பாஷையின் பின்னணியில் பெரும் வரலாறும், இலங்கிய செழுமையும் கூட உள்ளது.
சென்னையில் மட்டும் பிரத்தியேகமாக பயன்படுத்தப்படும் இதுபோன்ற வார்த்தைகள் உருவானது எப்படி அதையும் வாருங்கள் பார்க்கலாம் வங்காள விரிகுடா கரையோரம் அமைந்த சென்னையில் கால் பதிக்காத வெளிநாட்டுக்காரர்களே இல்லை என்று சொல்லலாம்.
இங்கிலாந்து ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பே, அரேபியர்கள், சீனர்கள் என பல நாட்டுக்காரர்களும், சென்னை மண்ணை தொட்டுச் செல்லாமல் போனதில்லை. இப்போது சென்னையில் பேசப்படும் சில வார்த்தைகள் இந்த குறிப்பிட்ட நாட்டுக்காரர்களிடம் இருந்து பெறப்பட்டதுதான்.
இவற்றைத்தவிர மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்படுவதற்கு முன்பாக அனைத்து மொழிக்காரர்களும் சென்னையில் வசித்ததால், அவர்களின் வார்த்தைகளும் கலந்து சென்னை தமிழ் என்றாகிவிட்டது. தற்போது பேசப்படும் சென்னை தமிழ், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளின் ஆதிக்கம் அதிகம் கொண்டது.
சில வார்த்தைகள் சங்க இலக்கியத்தில் இருக்கிறது என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும். உட்கார் என்பதைவிடவும் இலக்கிய வளமை கொண்ட சொல் குந்து என்பது. பாவேந்தர் பாரதிதாசன் கூட, காற்று குந்தி சென்றது.. மந்தி வந்து குந்தி.. என்று தனது கவிதைகளில் பயன்படுத்தியிருப்பார்.வட கர்நாடகாவில் பயன்படுத்தப்படும் கன்னட சொற்களில் குந்து என்ற வார்த்தை இப்போதும், பயன்படுத்தப்படுகிறது.
இவ்வுளவு சிறப்பு மிக்க சென்னை கடும் மழை வரும்போதும் சரி கடும்வறட்சியை சந்தித்தாலும் சரி என்னைய யாராலும் அழிக்க முடியாதுடா என பினிக்ஸ் பறவை போல கெத்தாக நிற்கிறது சென்னை.
தன்னை நோக்கி ஆயிரம் கனவுகளுடன் கால் வைக்கும் ஒவ்வொரு சாமான்யனையும், சலிக்காமலும், விழுந்துவிடாமலும், தாங்கி இறுக்கி பிடிக்கும், நம் நேசமிகு பாசமிகு நம் சென்னைக்கு பாசமிகு வாழ்த்துக்கள்..
{[ஆதாரங்கள்: விகடன்,செனையின் கதை,ஒன் இந்தியா தமிழ்,சென்னையின் வரலாறு}}