இரண்டாவது திருமணம் செய்த கணவர் - கதறும் மனைவி: கைக்குழந்தியோடு சாலையில் தர்ணா
செங்கல்பட்டில் வேறொரு திருமணம் செய்துகொண்ட கணவரை மீட்டுத் தரக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புக்கத்துறை பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் என்பவரின் மகள் கீதா. இவருக்கும் மதுராந்தகம் ஒத்தவாடை தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், கணவர் முத்துக்குமார் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மனைவி கீதா அவரிடம் கேட்டபோது முறையான பதில் அளிக்காததால் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து புகாரின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து புகாரை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் அவரை மீண்டும் மேல்மருவத்தூர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கீதா இரண்டாவது முறையாக அனைத்து மகளிர் காவல் காவல் நிலையத்திற்குச் சென்று கேட்டபோதும் முறையாக பதில் அளிக்காததை கண்டித்து கீதா தனது ஏழு வயது பெண் குழந்தையுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து ஒருமணி நேரத்திற்கும் மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கீதாவை அங்கிருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.