ஓடும் பேருந்தில் மது அருந்திய பள்ளி மாணவிகள் - விளக்கம் கேட்டு பள்ளிக்கு நோட்டீஸ்
செங்கல்பட்டில் ஓடும் பேருந்தில் பள்ளி மாணவிகள் பீர் குடித்த விவகாரம் விஸ்பரூபம் எடுத்துள்ளது.
கடந்த இரு தினங்களாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில் செங்கல்பட்டி மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள பொன்விளைந்த களத்தூரில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது.இங்கு திருக்கழுக்குன்றம், வல்லிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இவர்களில் சில மாணவிகள் தச்சூர் நோக்கி செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்யும்போது பீர் குடிக்கும் வீடியோ காட்சி வெளியானது. 34 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் மாணவ, மாணவிகள் அனைவருமே நின்றுகொண்டே பயணம் செய்கின்றனர். அப்போது மாணவிகளில் ஒருவர் பீர் பாட்டிலை அசால்டாக தூக்கிப்பிடித்து அதனை குடிக்க அவரை தொடர்ந்து பக்கத்தில் இருந்த மற்ற மாணவிகளும் எந்தவித தயக்கமுமின்றி ஒருவர் பின் ஒருவராக அதே பீர் பாட்டிலை வாங்கி மாறி மாறி குடிக்கிறார்கள்.
வீடியோவில் மாணவிகள் முகம் தெளிவாக தெரியும்படி சக மாணவியே வீடியோ எடுத்துள்ளார். மேலும் பேருந்தில் பயணிக்கும் மற்ற பயணிகளோ, நடத்துநர், டிரைவர் என யாருமே எதுமே இதற்கு சொல்லவில்லை என கூறப்படுகிறது. மேலும்'குடிச்சா வாசனை வருமாடி எனக் கேட்டுக் கொண்டே மாணவிகள் பீர் குடிப்பது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து இதுதொடர்பாக மாவட்ட கல்வித்துறை மற்றும் திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணையை தொடங்கினர். வீடியோவில் உள்ள குறிப்பிட்ட மாணவிகளை மட்டும் அழைத்து அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினர். பள்ளியை விட்டு வெளியே சென்றவுடன் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது என்றும், இதுபற்றி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்க உள்ளோம் எனவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மேரி ரோஸ் மிர்மலா மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் தாமோதரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சம்மந்தப்பட்ட பள்ளிக்கு குழந்தைகள் நல அலுவலர், செங்கல்பட்டு தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பள்ளி மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து அந்த பள்ளிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.