பாலியல் குற்றவாளிகளுக்கு இனி ஆண்மை நீக்குதல் தண்டனை - பாகிஸ்தானில் புது சர்ச்சை
தொடர்ச்சியாக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் அளிக்கும் சட்டத்திருத்தத்துக்கு பாகிஸ்தான் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஆண்டுதோறும் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வு குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது வளரும் நாடுகள் தொடங்கி வளர்ந்த நாடுகள் வரையிலும் பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது.
இது போன்ற குற்றங்கள் சில நேரங்களில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து அவர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தை கையில் எடுத்து சட்டங்களை கடுமையாக்க வலியுறுத்துகின்றனர்.
அந்த வகையில் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை பாகிஸ்தானில் சமீபகாலங்களில் கடுமையாக அதிகரித்ததால் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்க வேண்டும் என பொதுமக்கள் அந்நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.
பாலியல் குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்விதை நீக்கல் அல்லது ஆண்மை நீக்குதல் (Chemical Castration) தண்டனையை வழங்க வழிவகை செய்யும் சட்டத்துக்கு அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
புதிய பாலியல் வன்புணர்வு எதிர்ப்பு சட்டத்திற்கு பாகிஸ்தான் ஜனாதிபதி அரிஃப் அல்வி ஒப்புதல் அளித்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆண்மை நீக்குதல் செய்யப்பட்ட பின்னர், குற்றவாளி தனது வாழ்நாள் முழுதும் பெண்களுடன் உறவில் ஈடுபட இயலாமல் போகும். மருத்துவ ரீதியாக உடலில் செலுத்தப்படும் மருந்தின் மூலம் குற்றவாளியின் ஆண்மை நீக்கப்படும். இந்த தண்டனை சில அமெரிக்க மாகாணங்கள், தென் கொரியா, போலந்து, செக் குடியரசு போன்ற நாடுகளில் நடைமுறையில் இருந்து வருகிறது.
பாகிஸ்தானில் நடைபெறும் பாலியல் வன்புணர்வு குற்ற வழக்குகளில் 4% அளவுக்கே தண்டனை கிடைப்பதாக கூறப்படும் நிலையில் இந்தப் புது சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.