ஒருவர் காலடியில் மடிவதை விட எழுந்து சாகலாம் என உரைத்த சேகுவேரா பிறந்த தினம் இன்று! சே என்றாலே புரட்சிதான்!

ஒருவரின் காலடியின் வாழ்வதை விட, எழுந்து நின்று உயிரை விடுவதே மேல் என உலகிற்கு தைரியத்தையும், நம்பிக்கையும் விதைத்து சென்ற நமது தோழர் சே குவேரா பிறந்த தினம் இன்று...

யார் இந்த சே குவேரா?

கியூபப் புரட்சியில் பங்கேற்ற இடதுசாரிப் புரட்சியாளர் எர்னெஸ்டோ 'சே' குவேரா அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் 1928 ஜூன் 14 அன்று ஒரு ஸ்பானிய தந்தைக்கும், ஐரிஷ் வம்சாவழியில் வந்த தாய்க்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா. சே என்றால் தோழன், சே குவேரா அனைவரது தோழனாகவும் விளங்கினார். சே குவேரா, வசதியான நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1952-ல், பியூனோஸ் எய்ரஸ் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற ஒரு மருத்துவ மாணவர். பிற்காலத்தில், 'லட்சிய வீரர்' என்று உலகளவில் பெயரெடுத்தார். மாணவப் பருவத்திலேயே, பெரோண் ஆட்சியை எதிர்த்து, அரசியலில் ஈடுபடவும் ஆரம்பித்தார்.

பிடலின் சந்திப்பு - மாற்றம்:

சே குவேரா, தமது வாழ்நாள் தோழராக விளங்கிய பிடல் காஸ்ட்ரோவை 1955இல் மெக்சிகோவில் சந்தித்தார். பிடலின் ஜூலை 26 இயக்கத்தில் இணைந்து கியூபா சர்வாதிகாரி புல்ஜென்சியோ பாடிஸ்டாவின் அரசுக்கு எதிரான புரட்சியில் பங்கேற்ற சே குவேரா, புரட்சி வெற்றிபெற்ற பின்னரும் பிடல் தலைமையில் அமைந்த கியூப அரசில் அமைச்சர், மத்திய வங்கித் தலைவர் உள்ளிட்டப் பொறுப்புகளை வகித்தார். 1951இல் மருத்துவம் படித்துக்கொண்டிருந்தபோது தனது நண்பர் அல்பெர்டோ கிரானடோவுடன் ஒன்பது மாதங்கள் இரு சக்கர வாகனத்தில் தென்னமெரிக்க கண்டம் முழுதும் பயணித்தார். அப்போது சே குவேரா எடுத்த குறிப்புகள் 'தி மோட்டர் சைக்கிள் டைரீஸ்' என்ற பெயரில் பின்னாளில் புத்தகமாக வெளியானது. அந்தப் புத்தகத்தின் அதே தலைப்பில் ஒரு ஸ்பானிய மொழித் திரைப்படமும் எடுக்கப்பட்டது.

கியூபாவில் புரட்சி வெற்றி பெற்று, அரசியல் பதவிகளை அலங்கரித்த சே தன் வாழ்நாட்களை முழுமையாக கியூபாவில் மட்டும் செலவளிக்கவில்லை. கியூபாவைப் போன்ற பல்வேறு அரசியல் பொருளாதாரச் சவால்களைக் கொண்ட லத்தின், அமெரிக்க தேசங்களின் நிலைமை சேவின் நினைவுகளை ஆக்கிரமித்திருந்தன.

வெவ்வேறு நாடுகளிலும் புரட்சி செய்த சே:

கியூபாவை விட்டு வெளியேறும் முன், தனது நண்பரும் கியூப அதிபருமான பிடல் காஸ்ட்ரோவுக்கு இப்படி கடிதம் எழுதுகிறார் சே. அதில் என்னுடைய எளிமையான முயற்சிகளும் உதவிகளும் சில நாடுகளுக்குத் தேவைப்படுகிறது. ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவதை கடமையாக மேற்கொள்வேன். அதை நிறைவேற்றவும் செய்வேன். எனது மனைவி மக்களுக்காக எந்தச் சொத்தையும் நான் விட்டுச் செல்லவில்லை. அதற்காக வருத்தப்படவும் இல்லை. நமது முன்னேற்றம் எப்போதும் வெற்றியை நோக்கியே. வெற்றி அல்லது வீரமரணம் என எழுதினார் சே.

தன் வாழ் நாளெல்லாம் மக்களுக்காக போராடிய சேகுவேரா 1967-ம் ஆண்டு பொலிவியக் காடுகளில், போராட்ட களத்தில் அமெரிக்க படைகளால் கைது செய்யபடுகிறார். அமெரிக்க அதிகாரிகளால் பொலிவியாவில் உள்ள பள்ளிக்கூடத்தில் அவரை சிறைவைக்கின்றனர். அங்கு அவருக்கு உணவு வழங்க ஒரு பணிப்பெண் நியமிக்கப்பட்டார்.

அவரிடம் இது என்ன இடம்? என்று கேட்டார் 'இது ஒரு பள்ளிக்கூடம்' என்றார் பணிப்பெண். 'இப்படியொரு மோசமான நிலையில் ஒரு பள்ளிக்கூடமா... எங்களின் போராட்டம் வெற்றி பெறட்டும், உங்களுக்கு புதிய பள்ளி ஒன்றைக் கட்டி தருகிறோம்' என்று கூறினாராம் சேகுவேரா.

காதலிக்கு எழுதிய கடிதம்:

ஒரு நாள் சே, அவரது காதலிக்கு எழுதிய கடிதத்தில், நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன் என்று உனக்கு தெரியும், அதற்காக என்னால் என்னுடைய சுதந்திரத்தை விட முடியாது. அது நான் என்னையே விட்டு கொடுப்பதற்கு சமம். இந்த உலகத்தில் எனக்கு உன்னை விட முக்கியமான நபர் இருக்கிறார். அது நான்..

சேவில் மறைந்த புரட்சி, ஒவ்வொரு இளைஞர்களுக்குள் உருவானது:

வாழ்க்கையில் மக்களுக்கும், இளைஞர்களுக்கும் புரட்சி செய் என கற்றுக்கொடுத்த இந்த மாமேதை அக்டோடபர் 9, 1967 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார். எந்த நாட்டில் சேகுவேராவை அழிக்க வேண்டும் என்று எண்ணியதோ, எந்த நாடு சேகுவேராவின் வரலாற்றை சிதைக்க எண்ணியதோ இன்று அந்நாட்டில் நடைபெறும் அத்தனை போரிலும் ’சே’வின் முகம் தான் முன்னால் நிற்கும்.

ஒரு அநீதியை கண்டு ஆத்திரத்தில் நீ அதிர்ந்து போவாயானால் நீயும் என் தோழனே என முழங்கிய சேகுவேராவை அனைத்து புரட்சியாளர்களும் பின் தொடர்கின்றனர். எங்கு ஒருவன் தன் அநீதிக்கு குரல் கொடுக்கிறானோ, எங்கு தன் உரிமைக்கு போராட்டம் எழுகிறதோ அங்கெல்லாம் சேகுவேராவும் வாழ்ந்து வருகிறார். போராட்டங்கள் ஓய்வதில்லை... சேகுவேராவின் வீரமும் சாய்வதில்லை.. அவர்களது தோழர்களும் வீழ்வதில்லை... மண்டி இடுவதை விட எழுந்து சாகலாம்... சே

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்