மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும். அறிவித்த மாநிலம் எது?
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. தினசரி பாதிப்புகள் மற்றும் மரணங்கள் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன.
இதனால் பாதிப்புகளை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி செலுத்துவதையும் விரைவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.
இந்தியாவில் கடந்த வாரம் வரை 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.
இதனை அனைவருக்கும் வயது வித்தியாசமின்றி செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.
இதில் 50% தடுப்பூசிகளை தயாரிக்கும் நிறுவனங்கள் மத்திய அரசுக்கும் மீதமுள்ள 50% தடுப்பூசிகளை மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விற்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
சீரம் நிறுவனம் மாநில அரசுகளுக்கு வழங்கும் தடுப்பூசியின் விலை ரூ.400 என்றும் நிறுவனங்களுக்கு தருவதை ரூ.600 என்றும் உயர்த்தி நிர்ணயித்துள்ளது. ஆனால் மத்திய அரசுக்கு தொடர்ந்து ரூ.150க்கு வழங்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த முடிவு தனியார் கொள்ளை லாபத்திற்கே இட்டுச் செல்லும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலம் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு உரிய உதவிகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.