புதுக்கோட்டையில் தேர் கவிழ்ந்து விபத்து - 5 பேர் காயம்..!
புதுக்கோட்டையில் தேரோட்டத்தின் போது தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் ஐந்து பேர் காயம் அடைந்தனர்.
கோவில் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றானதும் புதுக்கோட்டை மன்னர் பரம்பரைக்கு குலதெய்வமாக விளங்கும் ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை கோகர்னேஸ்வரர் ஆலயத்தில் ஆடி திருவிழா கடந்த ஒன்பது நாட்களுக்கு முன்பாக கொடியேற்றத்துடன் வெகு விமர்சியாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து தினமும் ஆலயத்தில் இருந்து நான்கு வீதிகள் வழியாக பிரகதாம்பாள் அம்மன் விநாயகர் முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் வீதி உலா சென்றனர்.
தேர் சாய்ந்து விபத்து
இந்நிலையில் இன்று முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது இந்நிலையில் இன்று காலை 8 55 மணிக்கு தேர் புறப்பட்டு இரண்டு அடி கூட வெளியே வராத நிலையில் திடீரென சாய்ந்தது.
இதனால் அருகில் நின்று கொண்டிருந்த ஐந்து பேர் மீது தேர் கவிழ்ந்ததில் காயமடைந்த ஐந்து பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இது குறித்து விசாரணை செய்ததில் தேரில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட வேண்டிய கிளாம்புகள் பொருத்தப்படவில்லை என்றும் இதுகுறித்து ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பக்தர்கள் தெரிவித்தும் அதனை அதிகாரிகள் செவி சாய்த்து கேட்கவில்லை என்றும் இதனால் தான் தேர் நிலையிலிருந்து புறப்பட்டு நிலை தடுமாறி சாய்ந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டார் மேலும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.