தஞ்சாவூர் தேர் விபத்து ; சட்டப்பேரவையில் இரண்டு நிமிட மவுன அஞ்சலி..!

M. K. Stalin Tamil nadu
By Thahir Apr 27, 2022 04:49 AM GMT
Report

தஞ்சாவூர் தேரோட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தமிழக சட்டப்பேரவையில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் குருபூஜை விழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தேர் திருவிழா நடைபெற்றது.

இந்த தேர் திருவிழாவில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேர் உயர் மின்அழுத்த கம்பியில் உரசி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 16 பேரும் தஞ்சாவூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து முதலமைச்சர் இந்த விபத்து தொடர்பாக இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இதுகுறித்து பேசிய அவர், சிகிச்சை பெறும் அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க நான் (முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ) உத்தரவிட்டுள்ளேன்.

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்றார். விபத்து நடந்த இடத்திற்கு தான் நேரில் சென்று உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற உள்ளதாக உள்ளார்.

மேலும் இப்பணிகளை மேற்பார்வையிடவும் துரிதப்படுத்திடவும் தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ,மக்கள் பிரதிநிதிகளும்,அரசு உயர் அதிகாரிகளும் அனுப்பப்பட்டுள்ளார்கள் என தெரிவித்தார்.

மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்திடும் வகையில் பேரவையில் இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

தீர்மானத்தில் மிகுந்த துயரமான இச்சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிகிறேன் என்றார்.

இதையடுத்து தேர் விபத்தில் உயிரிழந்தோருக்கு பேரவையில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.