இந்தியா - இலங்கை அணிகள் மோதும் டி20 கடைசி போட்டி : அணியில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்
இலங்கை அணிக்கு எதிரேயான இந்தியாவின் மூன்றாவது டி20 போட்டி இன்று தொடங்குகிறது.
இந்த தொடரை இந்திய அணி ஏற்கனவே வென்ற நிலையில், தொடரை முழுமையாக கைப்பற்றும் உத்வேகத்துடன் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.
இலங்கை அணி ஒரு போட்டியிலாவது வெல்லும் முனைப்புடன் உள்ளது. இந்திய அணி தொடர்ந்து 2 போட்டிகளை ஓய்வின்றி விளையாடி வருவதன் காரணமாக ரோகித் ஷர்மா இன்றைய ஆட்டத்தில் ஓய்வு எடுப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.
இது குறித்து நேற்று பேசும் போது, “ஓய்வு முக்கியம் தான், நான் கடைசி போட்டியில் விளையாடுவது குறித்து அணி நிர்வாகம் முடிவு எடுக்கும்” என்று ரோகித் ஷர்மா கூறினார்.
ஒருவேளை, ரோகித் அப்படி ஓய்வு எடுத்தால், இந்திய அணியின் துணை கேப்டனான பும்ரா அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் இன்றைய ஆட்டத்தில் கேப்டனாக களமிறங்கலாம்.
அதே போல் நீண்ட நாட்களாக வாய்ப்புக்காக காத்திருக்கும் மாயங் அகர்வால் ரோகித்துக்கு பதிலாக களமிறங்கலாம். இன்றைய போட்டியில் பேட்டிங் வரிசையிலும் சில மாற்றங்களை கொண்டு வர டிராவிட் முடிவு எடுத்துள்ளார்.
அதன் படி சஞ்சு சாம்சன் அல்லது வெங்கடேஷ் ஐயரை தொடக்க வீரராக களமிறக்க ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
அதேபோல் நேற்றைய ஆட்டத்தில் இஷான் கிஷன் ஹெல்மேட்டில் பந்து தாக்கியதால் அவருக்கும் இன்றைய ஆட்டத்தில் ஓய்வு வழங்கப்படலாம்.
மேலும், பந்துவீச்சில் புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு முகமது சிராஜுக்கும், சாஹலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரவி பிஸ்னாய் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.
இலங்கை அணியை பொறுத்தவரை, முதல் போட்டியை விட இரண்டாவது போட்டியில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. எனினும் ஃபீல்டிங் மற்றும் பந்துவீச்சில் அந்த அணி கவனம் செலுத்த வேண்டும்.