இனி 600 மார்க்கிற்கு தேர்வு - 10ஆம் வகுப்பு தேர்வில் வந்த மாற்றம் - பள்ளிக்கல்வி துறை அதிரடி!!
மாணவர்கள் தேர்வு செய்யும் விருப்ப மொழி பாடத்திலும் இனி 35 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம் என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
4-வது மொழி
தமிழ் படிக்கும் சட்டம் 2006-இல் கட்டாயப்படுத்தப்பட்ட நிலையில், தங்கள் மொழியை நான்காவது மொழியாக படிக்கும் மாணவர்கள் அப்பாடத்தில் பெறும் மதிப்பெண்கள் தேர்ச்சிக்குக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் மாநிலத்தில் சிறுபான்மை மொழிகளான தெலுங்கு, கன்னடம், மராத்தி போன்ற பாடங்களின் தேர்வில் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதது அவமதிப்பாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் சிறுபான்மை சமுதாய அமைப்புகள் வழக்கு தொடுத்தன.
அவ்வழக்கில், விருப்ப பாடத்திற்கும் மதிப்பெண்கள் வழங்கி தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களை நிர்ணயம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரசாணை
இதனை தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில், நான்காவது விருப்ப பாடமாக இடம்பெறும் தமிழ் அல்லாத பிறமொழிப் பாடங்களுக்கு, 35 மதிப்பெண் தேர்ச்சிக்குரிய மதிப்பெண் என்றும், இந்த மதிப்பெண் இனி தேர்ச்சிக்குரிய கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை அடுத்த கல்வியாண்டில் (2024-2025) இருந்து அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம், தமிழ் அல்லாத பிறமொழிப் பாடத்தை விருப்ப பாடமாகத் தேர்வு செய்யக்கூடிய மாணவர்களுக்கு, அடுத்த கல்வி ஆண்டிலிருந்து ஒட்டுமொத்தமாக 6 பாடங்கள் அதாவது 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத வேண்டும் என்ற புதிய நடைமுறையும் அமலுக்கு வருகிறது.