மன உளைச்சலில் இருந்தேன் - மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அரசு பேருந்து ஓட்டுநர்!
பணியிட மாற்றம் வழங்கப்பட்டதிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் அரசு பேருந்து ஓட்டுநர்.
காலில் விழுந்து கோரிக்கை
தேனி மாவட்டத்தை சேர்ந்த கண்ணனை என்பவர் கடந்த 9 ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் சுங்கம் கிளையில் அரசு பேருந்து ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இவரின் மனைவி டெங்கு பாதிப்பால் உயிரிழந்துள்ளார். கண்ணன் கோவையில் பணி புரிவதால் தேனியில் உள்ள இவரின் 6 மாத பச்சிளம் குழந்தையையும், 6 வயது மகளையும் கவனித்துக் கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இவரின் தந்தையும் தாயாரும் வயதானவர்கள் என்பதால் அவர்களையும் கவனித்துக் கொள்ளமுடியாமல் இருந்துள்ளது. இந்நிலையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் அவர்கள் நேற்று போக்குவரத்து துறை பணியாளர்களுக்கான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கோவை அரசு போக்குவரத்து பணிமனை அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
அப்போது கண்ணன் தனக்கு பணியிட மாறுதல் வழங்க கோரி தனது 6 மாத குழந்தையை அமைச்சரின் காலில் விழவைத்து தானும் விழுந்துள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்தது முதலமைச்சரின் உத்தரவின் பேரில், ஓட்டுநர் கண்ணன் கோவையில் இருந்து சொந்த ஊரான தேனிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சருக்கு நன்றி
இதுகுறித்து பஸ் ஓட்டுநர் கண்ணன் கூறுகையில் 'என்னுடைய மனைவி டெங்கு காய்ச்சலால் ஒரு மாதத்திற்கு முன் இறந்துவிட்டார். இதனால் எனது பிள்ளைகளையும், வயதான அம்மா அப்பாவையும் ஊரில் விட்டுவிட்டு நான் வேலைக்கு சென்றுவிடுவேன்.
அங்கு சென்று என்னால் வேலை செய்ய முடியவில்லை. பிள்ளைகளை சரியான முறையில் கவனித்துக் கொள்ள முடியாததினால் கடும் மன உளைச்சலில் இருந்தேன். இந்நிலையில் நான் நேற்று போக்குவரத்து துறை அமைச்சரிடம் மனு கொடுத்தேன். உடனடியாக இன்று எனக்கு கோவையில் இருந்து தேனிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதற்காக மாண்புமிகு முதலமைச்சருக்கும், போக்கு வரத்து துறை அமைச்சருக்கும் என் குடும்பத்தின் சார்பிலும், என்னுடைய சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கண்ணன் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.