சுயேட்சையாக மனுத்தாக்கல்: அதிமுக-விலிருந்து எம்எல்ஏ சந்திரசேகரன் நீக்கம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்த எம்எல்ஏ சந்திரசேகரன் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியில் ஆளும்கட்சி எம்எல்ஏ-வாக இருப்பவர் சந்திரசேகரன். இந்த தேர்தலில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது, அந்த தொகுதியில் அதிமுக சார்பில் சந்திரன் என்பவர் களமிறக்கப்பட்டுள்ளார்.
இதனால் அந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்து, இன்று மனுத்தாக்கலும் செய்தார். இந்நிலையில் சந்திரசேகரன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், ‘கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் ,
கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்ததோடு மட்டுமல்லாமல் ,
கழக வேட்பாளரை தோற்கடிப்பேன் என்று செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ள காரணத்தாலும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகரன் எம்எல்ஏ இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர், பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் ” என்று குறிப்பிட்டுள்ளனர்.