தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஓரிரு இடங்களில் வெப்பம் அதிகரிக்கும்
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று மற்றும் நாளை ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்று மற்றும் நாளை ஆகிய நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.