சென்னை மேயர் பிரியாவுக்கு காத்திருக்கும் சவால்கள் - சமாளிப்பாரா? சறுக்குவாரா?

dmk mkstalin chennaicorporation tngovernmnet chennaimayorpriya
By Petchi Avudaiappan Mar 12, 2022 07:00 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report


பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே சென்னை மாநகராட்சியின் சவால்களை எதிர்கொள்ள களம் இறங்கி உள்ளார் மேயர் பிரியா.

15மண்டலங்களைக் கொண்ட சென்னை மாநகராட்சியில் அவருக்கான சவால்கள் என்னவாக உள்ளது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

சென்னையின் முதல் தலித் மேயர் என்ற பெருமையோடும், முதல்வரின் உறுதுணையோடும் சென்னை மாநகராட்சிப்பணிகளை மேற்கொள்வேன் என்று பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்து வந்த மேயர் பிரியா தற்போது மாநகராட்சியின் நிகழ்ச்சிகளுக்கு செல்ல தொடங்கியுள்ளார்.

அதன்படி நேற்றைய தினம் வருமுன் காப்போம் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர்,  மேயராகி ஒருவாரம் தானே ஆகிறது , வருங்காலங்களில் பல திட்டங்களை கொண்டு வருவோம் என நம்பிக்கையோடு தெரிவித்தார்.

மேலும் சென்னை மாநகராட்சியில் ஆறு ஆண்டுகளுக்குப் பின், கவுன்சிலர்கள், மேயர், துணை மேயர் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்.  கடந்த ஆறு ஆண்டுகளாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாத சூழலில் கூடுதல் பொறுப்பாக மாநகராட்சி ஆணையர் கவனித்துக் கொண்டாலும், அடிப்படைப் பிரச்சனைகளை தீர்ப்பதில் சென்னை மாநகராட்சி பெரும் திண்டாட்டத்தைச் சந்தித்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

இதனால் கமிஷனருக்கான சிறப்பு அதிகாரங்கள் ரத்தாகி மாநகராட்சி நிர்வாகம் மேயரின் நேரடி கட்டுப்பாட்டில் வந்துள்ளது. சென்னை மேயரான பிரியா சமாளிக்க வேண்டிய பெரும் சவால் என பார்க்கப்படுவது மாநகராட்சியின் கடனை அடைப்பதும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதும் தான்.

ஆண்டுக்கு ரூ.2,650 கோடி சொத்து வரி, தொழில்வரி போன்ற இதர வரிகளின் மூலம் சென்னை மாநகராட்சிக்கு வருமானம் வருகிறது. குறிப்பாக சொத்துவரி வாயிலாக ஆண்டுக்கு ரூ.700 கோடி,  தொழில் வரி வாயிலாக ரூ.350 கோடி வருமானம் கிடைக்கிறது. மேலும், இதர வரிகள் வாயிலாக ரூ.1,600 கோடி ரூபாய் என ஆண்டுக்கு மொத்தம் 2,650 கோடி ரூபாய் வசூலாகிறது.

ஆனாலும் ஊழியர்களின் சம்பளம் மற்றும் நிர்வாக செலவினங்கள் அதை விட அதிகம் இருப்பதால் மாநகராட்சி நிர்வாகம் ரூ.800 கோடி ரூபாய் கடனில் இருக்கிறது. சென்னை மாநகராட்சியில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியில் உள்ளனர். இவர்களுக்கான சம்பளத் தொகையே ரூ.1,300 கோடி வரை செலவாவதாக கூறப்படுகிறது. 

அதேபோல் மாநகராட்சி நிர்வாக பணிகளுக்காக ஆண்டிற்கு ரூ.40 கோடி வரை செலவிடப்படுகிறது. இதர வருவாய் மற்றும் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிதிகளில் இருந்தும், உலக வங்கி, ஜிகா உள்ளிட்ட வங்கிகளிடமிருந்தும் பெறப்படும் கடன்கள் வாயிலாகவே வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சென்னை மேயர்  பிரியாவுக்கு காத்திருக்கும் சவால்கள் - சமாளிப்பாரா? சறுக்குவாரா? | Challenges For Chennai Corporation Mayor Priya

 நிகர கடன் தொகையான ரூ.800 கோடிக்கு  ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வட்டி கட்டப்படுகிறது. மாநகராட்சி பணிகள், கட்டமைப்பு, வருவாய், செலவு, கடன் உள்ளிட்டவை  மேயர் பிரியாவுக்கு சவால்கள் தான்.

சென்னையில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள், நடந்து வரும் திட்ட பணிகள் குறித்தும், சுகாதாரம், கல்வி, மழைநீர் வடிகால், சாலைகள் உள்ளிட்ட துறை வாரியான பணிகள், திட்டங்கள் போன்றவற்றிற்கு மேலும் நிதி தேவைப்படத்தான் செய்யும்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளாட்சியமைப்பில் உள்ளதால் மத்திய அரசு நிதி வழங்கும். அந்த நிதியை எந்தெந்த துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பயன்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் மேயர் பிரியா அவர்கள் ஆலோசித்து செயல்பட்டால் விரைவில் சென்னையில் நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.