புதிய கேப்டன் ரோகித் சர்மாவிற்கு முன் காத்திருக்கும் சவால்கள் - இதெல்லாம் நடக்குமா?
இந்திய கிரிக்கெட் ஒருநாள் அணியின் கேப்டனாக விராட் கோலி நீக்கப்பட்டு ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது பல்வேறு எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
நடந்து முடிந்த நியூசிலாந்து தொடரில் இருந்து டி20 அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வரும் நிலையில், தற்போது தென்னாப்பிரிக்கா தொடரிலிருந்து ஒருநாள் அணிக்கும் கேப்டன் ஆக உள்ளதாக சில தினங்களுக்கு முன் பிசிசிஐ அறிவித்தது.
ரோகித் சர்மாவுக்கு ஒரு அணியை வழிநடத்துவது என்பது புதிய விஷயம் அல்ல. கடினமான ஐபிஎல் தொடரில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 கோப்பையை வாங்கி தந்துள்ளார். விராட் கோலி இல்லாத பல சமயங்களில் அவர் இந்திய அணியை வழிநடத்தி இருக்கிறார் . துபாயில் நடைபெற்ற 2018 ஆசிய கோப்பையை ரோகித் சர்மா வென்று இருக்கிறார்.
ரோகித் சர்மாவுக்கு முன் இருக்கும் முதல் சவால் என்னவென்றால் தென்னாப்பிரிக்கா தொடரில் வெற்றி அடைய வேண்டும் என்பது தான். கடந்த முறை விராட் கோலி தலைமையிலான அந்த அணி ஒருநாள் தொடரை வென்றது. அதே போல் ரோகித் சர்மாவுக்கு இந்த தொடர் ஒரு அக்னிபரீட்சையாக இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் இந்திய ஒருநாள் அணியின் பிரச்சினையே நடுவரிசை தான். தோனி,ரெய்னாவிற்கு பிறகு இந்தியாவுக்கு ஒரு நல்ல நடுவரிசை பேட்ஸ்மேன்கள் இல்லை. அதனை சரிப்படுத்தி நல்ல அணியை உருவாக்க வேண்டும். 2023 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளது, இதனை வெல்வதே ரோகித் சர்மாவின் பெரிய சவாலாக இருக்கும். இதற்கான அணியை ரோகித் சர்மா இப்போதிலிருந்து கட்டமைக்க வேண்டும்.
விராட் கோலியின் கேப்டன்ஷிப் பறிக்கப்பட்டதால் அவர் அதிருப்தியில் இருக்க வாய்ப்பு உண்டு. இதனால் அவரை சமாதனப்படுத்தி அணியில் விரிசல் ஏற்படாமல் வைத்திருப்பதே ரோகித் சர்மாவின் முக்கிய
பணியாக இருக்கக்கூடும். இதெல்லாம் சரியாக நடக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.