விவாகரத்தால் மதுவுக்கு அடிமையானேன்; மனம் திறந்த யுவேந்திர சாஹல்
Yuzvendra Chahal reveals addicted alcohol after divorce: விவாகரத்தால் மதுபழக்கத்திற்கு அடிமையானேன் எனவும், அதிலிருந்து மீள மறுவாழ்வு மையத்திற்கு சென்றேன் எனவும் கிரிக்கெட்டர் யுவேந்திர சாஹல் தெரிவித்துள்ளார்.
சாஹல் விவாகரத்து
இந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல், கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், டாக்டர், யூடியூபர் மற்றும் நடன இயக்குநரான தனஸ்ரீ வர்மா என்பவரை திருமணம் செய்தார்.

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்திருந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
கடைசியாக 2023 ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக விளையாடிய அவர், தற்போது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
மதுப்பழக்கத்திலிருந்து மீள மறுவாழ்வு மையம்
இந்நிலையில், ஆகாஷ் சோப்ராவிற்கு அளித்த நேர்காணல் ஒன்றில் விவாகரத்துக்கு பின்னர் தான் எதிர்கொண்ட சிரமங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.

இதில் பேசிய அவர், “நீங்கள் ஒரு பொது நபராக இருக்கும்போது, உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் மற்றவர்கள் கருத்துச் சொல்வதற்கான ஓர் அழைப்பாக மாறிவிடுகிறது.
அது வருத்தமளித்தது, மேலும் மிகுந்த சிரமத்தையும் ஏற்படுத்தியது. அது எனது கிரிக்கெட்டையும் பாதித்தது.
அந்த ஆண்டு நான் 2 டி20 போட்டிகளில் விளையாடினேன், அதன் பிறகு டி20 போட்டிகளில் விளையாடவில்லை. எனது மனநிலை சரி இல்லாததால் என்னால் எனது முழுத் திறனுடன் செயல்பட முடியவில்லை. மேலும் எனது இருப்பு காரணமாக அணிக்கு எந்தவிதமான எதிர்மறை விளைவுகளும் ஏற்பட நான் விரும்பவில்லை.
பீதி தாக்குதலால் பாதிக்கப்பட்ட என்னால் பேசக்கூட முடியவில்லை. எனக்கு ஏதோ சரியில்லை என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ளும் வகையில், என் உதடு இறுகி ஒருபுறமாகச் சரிந்துவிடும்.

பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் வருடத்தில், எனக்காக ரூ.18 கோடி கொடுத்தபோது, 'அவர்கள் என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்; நான் அவர்களை ஏமாற்றக் கூடாது' என்று உணர்ந்தேன்.
ஏபி டி வில்லியர்ஸ் ஒருமுறை என்னிடம், 'வாழ்க்கையில் சமநிலைதான் முக்கியம்' என்று கூறினார். மதுவிற்கு அடிமையான நான் அந்த பழக்கம் எல்லை மீறி சென்று விட, அது எனக்கு பிடித்தமான கிரிக்கெட்டையே அழித்துவிடுவேன் என்பதை உணர்ந்தேன்.
அதனால், அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தேன். நிலைமை கைமீறிப் போய்விட்டதாக உணர்ந்த பின்னர் ஒரு மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து அங்கு 26 நாட்கள் தங்கியிருந்தேன். பின்னர் அந்த பழக்கத்தை கைவிட்டேன். இப்போது மிகவும் மகிழ்ச்சியாக மற்றும் சிறந்த நிலையில் இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.