நோ பாலுக்காக மல்லுக்கட்டிய டெல்லி அணி : சாஹல் - குல்தீப் நடுவே நடந்த சண்டை
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரில் சர்ச்சை கிளம்பிய நிலையில், மறுபுறம் சாஹல் - குல்தீப் செய்த சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
வான்கடே மைதானத்தில் நடந்த 34வது ஐபிஎல் போட்டியில் டெல்லி - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் 106, தேவ்தத் படிக்கல் 54, சஞ்சு சாம்சன் 46 ரன்கள் விளாசியதில் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது.
இதனைத் தொடர்ந்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் டெல்லி அணிக்கு கடைசி ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது. மெக்காய் வீசிய முதல் 3 பந்திலும் ஹாட்ரிக் சிக்சரை பவெல் பறக்கவிட ஆட்டம் யார் பக்கம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் 3வது பந்து பேட்ஸ்மேன் வயிற்றுக்கு மேல் வந்ததால் இதனை நோ பால் என்று அறிவிக்க வேண்டும் என்று டெல்லி அணியினர் போராட்டம் நடத்தாத குறையாக முறையிட்டனர்.
@azharflicks meanwhile Kuldeep and Chahal ?? pic.twitter.com/Fxb9CTTmAN
— Sehwag (@Sehwag54587220) April 22, 2022
ஆனால் கள நடுவர்கள் நோ பால் கொடுக்கவில்லை. இதனால் கேப்டன் ரிஷப் பண்ட் டெல்லி அணியின் வீரர்களை ஆட்டத்தை நிறுத்திவிட்டு வருமாறு கூறினார். பண்ட்டின் இந்த செயலும் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதற்கிடையில் நோ பால் சர்ச்சைகளுக்கு நடுவே ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல், குல்தீப்பிடம் போய் பேட்டிங் செய்யுமாறு ஜாலியாக கூறினார். குல்தீப் அங்கிருந்து வெளியேற முயல அவரது தலையை தட்டி போய் பேட்டிங் செய் என்பது போன்றும் சைகை காட்டினார். சாஹல் மற்றும் குல்தீப் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.