அம்மா உணவகங்களில் இலவச உணவு - சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு

chennaicorporation ammaunavagam அம்மா உணவகம்
By Petchi Avudaiappan Nov 08, 2021 05:46 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

மழை. வெள்ளம் பாதித்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

கடந்த சில தினங்களாக சென்னையில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றது. அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் ரெட் அலர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் முடுக்கிவிட்டுள்ளது. சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் ,அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் செயல்படும் அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிரடியாக அறிவித்துள்ளது. இதற்காக சென்னை முழுவதும் உள்ள 20 உணவு தயாரிக்கும் கூடங்களில் இருந்தும் ஒரு நாளைக்கு 1.5 லட்சம் பேர் சாப்பிடும் அளவுக்கு உணவு தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பொதுமக்கள் இலவச உணவு வழங்க வசதியாக அம்மா உணவக ஊழியர்கள் மூன்று வேளையும் பணிக்கு வந்து உணவு பரிமாறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 200 வார்டுகளிலும் மொத்தமுள்ள 403 அம்மா உணவகங்களும் முழு நேரமும் செயல்பட வேண்டும் என்றும் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

அம்மா உணவகங்களில் ஆண்டுக்கணக்கில் பணியாற்றி வந்த ஊழியர்களை இனி தினமும் பணிக்கு வராமல், ஒருநாள் விட்டு சுழற்சி முறையில் பணிக்கு வரும்படி சென்னை மாநகராட்சி அண்மையில் அறிவித்திருந்தது. தற்போது அம்மா உணவக ஊழியர்களை மீண்டும் முழுவீச்சில் பணிக்கு வரசொல்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.