தமிழகத்தில் 2 மாவட்டங்களில் வேகமெடுக்கும் கொரோனா - மத்திய அரசு எச்சரிக்கை!
இந்தியாவில் கொரோனா தொடர்ந்து கட்டுக்குள் இருந்தாலும், கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் வேகம் எடுத்து வருகிறது.
அதேபோல், தமிழகத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நேற்று கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் உள்ள 2 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.