வழக்கத்தை விட பெரும் ஏமாற்றம்... மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
2026 -27 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்றைய தினம் தாக்கல் செய்திருந்தார்.
பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றதை தொடர்ந்து நேற்று காலை 11 மணியளவில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டிற்கான வரி பகிர்வு விகிதத்தை 50% ஆக அதிகரிக்க வேண்டும் என தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் , அது அறிக்கையில் நிராகரிக்கப்பட்டிருந்தது.

16வது நிதிக்குழு பரிந்துரைகள் ஏற்கப்பட்டுள்ள நிலையில் மாநிலங்களுக்கான வரி பகிர்வில் எந்த மாற்றமும் இல்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இது தமிழக அரசுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
மேலும் அதில் ஏழைகள், பெண்கள், விவசாயிகள், விளிம்புநிலை மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் இடம் பெறவில்லை என்பதும் தமிழக அரசுக்கு அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். 'இந்த ஆண்டாவது வழலக்கமாகச் சொல்லும் திருக்குறளோடு சேர்த்து, தேர்தலை மனதில் வைத்தேனும் தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகள் இடம்பெறுமா?' என ஏற்கனவே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருந்த நிலையில், மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றத்தை தருவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பெரிதும் எதிர்பார்த்த ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை வழக்கத்தை விட பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கிறது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தாண்டாவது பாஜக அரசின் கண்களுக்கு தமிழ்நாடு தெரியும் என எதிர்பார்த்து இருந்தோம். அந்த எதிர்பார்ப்பை பொய்க்க செய்து ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. தமிழ்நாட்டின் நலன் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
ஏழைகள், பெண்கள், விவசாயிகள், விளிம்புநிலை மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் இடம் பெறவில்லை.மொத்த வரி வருவாயில் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் பங்கை 50 சதவீதமாக உயர்த்தும் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கான வரிப்பயிர்வு தொடர்ந்து 41 சதவீதம் என்ற அளவில் தொடரும் என்ற அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாட்டுக்கான ஒன்றிய வரிகளின் பங்கு ரூபாய் 1200 கோடி அளவில் குறைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது.
ஜல்ஜீவன் திட்டத்தின் திருத்திய மதிப்பீட்டில் 17 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது முடக்குவதற்கான முயற்சி. கிராம சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு 11 ஆயிரம் கோடி ரூபாய், வீடு கட்டும் திட்டத்திற்கு 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் பிஎம் இன்டர்ன்சிப் திட்டத்திற்கு வெறும் 526 கோடி என்ற சொற்ப அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.வழக்கமாக நிதிநிலை அறிக்கைகளிடம் பெரும் திருக்குறளும் இம்முறை இடம் பெறவில்லை.
பெரிதும் எதிர்பார்த்த ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை வழக்கத்தை விட பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கிறது.இந்த நிதிநிலை அறிக்கை மொத்தத்தில் ஏமாற்றும் ஏமாற்றம் ஏமாற்றத்தையே தருகிறது என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.