அதிகரிக்கும் சமையல் எண்ணெய் விலை... களமிறங்கிய மத்திய அரசு.. விலை குறையுமா?
இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக இரு நாடுகள் மட்டுமின்றி உலகின் பல நாடுகளும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கச்சா எண்ணெய் தொடங்கி சில சமையல் பொருட்கள் வரை அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது.
உலகளவில் சூரியகாந்தி உற்பத்தியில் முதன்மை இடத்தில் உள்ள உக்ரைனில் இருந்து போர் காரணமாக வரும் சூரியகாந்தி குறைந்துள்ளதால் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயர தொடங்கியுள்ளது. இதனால் உள்நாட்டில் விலையைக் குறைக்கும் நடவடிக்கையாக சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதிக்கு வரி விலக்கை மத்திய அரசு அறிவித்துள்ளது.
2022-23, 2023-24 ஆகிய நிதியாண்டுகளில் இந்த வரிவிலக்கு அளிக்கப்படும் என்றும் இந்த வரி விலக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் வரையிலான இறக்குமதிக்குப் பொருந்தும் எனவும் மத்திய நிதி அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.